ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் - வீடியோ மூலம் கலெக்டர் வேண்டுகோள்
ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று வீடியோ மூலமாக திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நிவாரண பணிகள் மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த குழுவினர் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், மாவட்டநிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் பதிவிட்டு வருகிறார்.
இந்த பணிகளுக்கு மத்திய மந்திரி, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் சமூக வலைதளம் மூலமாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக கலெக்டர் சமூக வலைதளத்தில் நேந்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் நம்ம ஊரு, நம்ம மக்கள் என்ற தலைப்பில் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:-
கொரோனாவை எதிர்த்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அனைவரும் போராடி வருகிறோம். இது முக்கியமான காலம். திருப்பூர் மக்களை முழுமையாக பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். மக்கள் தங்களை முதலில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள், சிறியவர்களை கவனித்துக்கொள்வது அனைவரின் கடமை.
நமது வீட்டை சுற்றி உள்ளவர்கள், ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமத்துடன் இருந்தால் அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
தன்னார்வலர்களைப்போல் உங்கள் ஒவ்வொருவராலும் உதவி செய்ய முடியும். உங்களுக்குள் இருக்கும் உண்மையான குணநலம், தலைமைப்பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
கொங்கு மண்டலம் மரியாதை கொடுக்கும் ஊர் என்பார்கள். நம்ம ஊர் மரியாதை கொடுக்குற ஊர் மட்டுமல்ல, மனசார கொடுக்குற ஊர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story