கொரோனா பிரச்சினையால் எம்.எல்.ஏ.வாக முடியாத நிலை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி தப்புமா?
கொரோனா பிரச்சினையால் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாக தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் பெரும் அரசியல் பூகம்பத்துக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் 28-ந் தேதி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இவர் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது மேல்-சபை உறுப்பினரான எம்.எல்.சி.யாகவோ இல்லை.
மந்திரி அல்லது முதல்-மந்திரியாக பதவி ஏற்பவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாக அல்லாத பட்சத்தில் அவர்கள் 6 மாதத்துக்குள் அந்த பதவிக்கு தேர்வாக வேண்டும். அதன்படி மேற்கண்ட பதவிகளில் இல்லாத உத்தவ் தாக்கரே அடுத்த மாதம் (மே) 28-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாக தேர்வு பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தற்சமயம் நடைபெற இருந்த அனைத்து தேர்தல்களும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.
மராட்டியத்தில் வருகிற 24-ந் தேதி 9 எம்.எல்.சி.க்களின் பதவி காலம் முடிகிறது. இதையொட்டி நடைபெற இருந்த தேர்தலில் எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது பதவியை தக்க வைத்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் அவரது முதல்-மந்திரி பதவிக்கு வேட்டு வைத்து விடுமோ என அஞ்சப்படுகிறது. காரணம், கொரோனா பிரச்சினையால் இந்த 9 எம்.எல்.சி.க்களுக்கான காலியிடங்களை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவிக்கவில்லை.
இந்திய அரசியலைப்பு சட்டத்தின் 164(4) விதியின்படி 6 மாதத்திற்குள் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. ஆக தேர்வு ஆகாதவர் மந்திரி அல்லது முதல்-மந்திரி பதவியை இழப்பார் என்று சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பு கூறி உள்ளது. இந்த பிரச்சினையில் 1995-ம் ஆண்டு பஞ்சாப் மாநில மந்திரி தேஜ் பிரகாஷ் சிங் பதவி விலக நேர்ந்த உதாரணமும் உண்டு.
எனவே அடுத்த மாதம் (மே) 28-ந் தேதிக்குள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாக தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி, அவரது கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கு அந்த பதவியை வழங்குவார் என்று கூறப்படுகிறது.
ஆனால் நாட்டில் எதிர்பாரத சூழல் நிலவி வருவதால், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி நீடிப்பதில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.
Related Tags :
Next Story