கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தா.பழூர் பகுதியில் வீடு, வீடாக விவரங்கள் சேகரித்த மருத்துவ குழுவினர்


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தா.பழூர் பகுதியில் வீடு, வீடாக விவரங்கள் சேகரித்த மருத்துவ குழுவினர்
x
தினத்தந்தி 2 April 2020 9:45 PM GMT (Updated: 3 April 2020 4:17 AM GMT)

தா.பழூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வீடு, வீடாக சென்று மருத்துவ குழுவினர் விவரங்களை சேகரித்தனர்.

தா.பழூர், 

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த தா.பழூர், காரைக்குறிச்சி, சிந்தாமணி, கோடங்குடி, இடங்கண்ணி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 744 வீடுகளில் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் நேற்று மருத்துவ குழுவினர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக விவரங்களை சேகரித்தனர்.

இந்த பணியில் தா.பழூர் வட்டார மருத்துவ அதிகாரி தட்சிணாமூர்த்தி தலைமையில் சுகாதார செவிலியர் விஜயராணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட உதவியாளர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமார் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 155 களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

வீடு, வீடாக சென்ற களப்பணியாளர்கள் வீட்டில் உள்ளவர்களின் விவரம், வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களுக்கு சமீபத்தில் சென்று வந்தவர்கள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்தனர். மேலும் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய ஒவ்வொரு வீட்டிலும் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல், நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு உள்ளதா? என்று கேட்கப்பட்டு, அவர்களை பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டது. ஊரடங்கின்போது வீட்டிலேயே இருக்கும்படியும், எப்போதும் தூய்மையாக இருக்கும்படியும் அவர்கள், பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.

Next Story