தூத்துக்குடியில் ஊரடங்கில் துணிகரம்: துறைமுக ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தூத்துக்குடியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் துறைமுக ஊழியர் வீட்டில் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்த நிலையில் ஒரு வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 59). இவர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜான்சி. இவர்களது 2 மகள்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
இதனால் கணவன், மனைவி மட்டும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு படுக்கை அறையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். நேற்று காலையில் கண்விழித்த வின்சென்ட் படுக்கை அறையில் இருந்து வெளியில் வர முயன்றார். அப்போது படுக்கை அறையின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், படுக்கை அறை கதவின் பூட்டை உடைத்து வெளியில் வந்தார். அங்கு உள்ள மற்றொரு படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை யாரோ மர்ம நபர் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், யாரோ மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் அருகே உள்ள ஜன்னல் வழியாக கையை விட்டு கதவை திறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து மோப்பநாய் கிஜோ வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச் சென்று திரும்பியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த துணிகர கொள்ளை குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story