டெல்லி சென்று திரும்பிய 15 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்


டெல்லி சென்று திரும்பிய 15 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
x
தினத்தந்தி 4 April 2020 3:45 AM IST (Updated: 4 April 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களில் 15 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 41 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 25 பேர் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். இதில் ஏற்கனவே பரமக்குடியை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 15 பேரின் ரத்த பரிசோதனை முடிவுகள் தற்போது வந்துள்ளன.

இவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 8 பேருக்கு மட்டும் இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி சென்று திரும்பியுள்ள 25 பேரின் வீடுகளில் உள்ள உறுப்பினர்கள் 113 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

அந்த 25 பேரின் வீடுகளை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள 35 ஆயிரம் வீடுகளில் தினமும் 417 சுகாதாரத்துறை பணியாளர்களால் சர்வே எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கொரோனா சிறப்பு வார்டுகளில் 444 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து 4 ஆயிரத்து 777 பேர் வந்துள்ளனர். இவர்களில் தற்போது வரை 2 ஆயிரத்து 468 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story