உசிலம்பட்டி பகுதியில் அறுவடையான நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
உசிலம்பட்டி பகுதியில் நெல் கொள்முதல் மையங்கள் மூடப்பட்டுள்ளதால் போதிய விலையின்றி அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே நெல் கொள்முதல் மையங்களை உடனே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட செல்லம்பட்டி பகுதியில் வின்னகுடி, சக்கரைப்பட்டி, மணல்பட்டி, கருமாத்தூர், விக்கிரமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் 40-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் மையங்கள் இயங்கி வந்தன. திடீரென இந்த பகுதியில் இயங்கி வந்த கொள்முதல் மையங்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில் காலதாமதமாக சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் தற்போது அறுவடையாகி வருகிறது. மேலும் பல்வேறு விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்லை தங்கள் வீடுகளில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். அவற்றை வெளி மார்க்கெட்டில் விற்றால் போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செல்லம்பட்டி பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த நெல் கொள்முதல் மையங்களை திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நெல் மற்றும் விவசாயிகள் தங்கள் வீடுகளில் இருப்பு வைத்திருக்கும் நெல்லுக்கு போதிய விலை கிடைக்கும்.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story