மும்பையில் கொரோனாவுக்கு 30 பேர் பலி - 433 பேருக்கு பாதிப்பு


மும்பையில் கொரோனாவுக்கு 30 பேர் பலி - 433 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 5 April 2020 11:00 PM GMT (Updated: 5 April 2020 7:52 PM GMT)

மும்பையில் கொரோனாவுக்கு இதுவரை 30 பேர்பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 433 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பை, 

நாட்டின் நிதி தலைநகரான மும்பையை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. இதுதவிர மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மும்பையின் இதயபகுதியில் உள்ள தாராவிக்குள்ளும் கொரோனா நுழைந்து உள்ளது.

இந்தநிலையில் நேற்று மட்டும் மும்பையில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 55 பேரின் மாதிரிகள், தனியார் பரிசோதனை மையங்களில் சோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள் கடந்த 31-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை எடுக்கப்பட்டவை ஆகும். ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததன் மூலம் மும்பை பெருநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல நேற்று ஒரேநாளில் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர கடந்த 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை உயிரிழந்த 3 பேர் கொரோனாவால் பலியானதும் தற்போது தெரியவந்துள்ளது. பலியானவர்களில் 6 பேர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். 2 பேர் முதியவர்கள். ஏற்கனவே மும்பையில் கொரோனாவுக்கு 22 பேர் பலியாகி இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது.

இதுவரை மும்பையில் கொரோனா வெளிநோயாளிகள் பிரிவில் 9 ஆயிரத்து 664 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரத்து 595 பேருக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 433 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் 54 பேர் நோயில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

Next Story