கொரோனா தடுப்பு நடவடிக்கை: புளியங்குடி தனிமைப்படுத்தப்பட்டது - போலீசார் தீவிர கண்காணிப்பு


கொரோனா தடுப்பு நடவடிக்கை: புளியங்குடி தனிமைப்படுத்தப்பட்டது - போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 5 April 2020 10:30 PM GMT (Updated: 5 April 2020 7:52 PM GMT)

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக புளியங்குடி தனிமைப்படுத்தப்பட்டது. ஊர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புளியங்குடி, 

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லியில் நடந்த மாநாட்டில் புளியங்குடியை சேர்ந்த 2 பேர் கலந்துகொண்டனர். அவர்களை நகரசபை சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் தென்காசி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். இதில் ஒருவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படாததால் அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் வசிக்கும் வீடு தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று புளியங்குடி நகர் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புளியங்குடியில் உள்ள அனைத்து தெருக்களும் தடுப்புக்கட்டைகளால் அடைக்கப்பட்டு உள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டுக்கு ஒருவர் வெளியே வர அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. புளியங்குடி, டி.என்.புதுக்குடி ஆகிய பஸ்நிலையங்களில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி கடைகள் நேற்று முதல் அடைக்கப்பட்டன.

நகரசபை ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈசுவரன் மற்றும் சுகாதாரத்துறையினர் புளியங்குடி நகராட்சியின் அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகரசபை சார்பில் புளியங்குடி பகுதியில் நடமாடும் காய்கறி கடை நேற்று காலை தொடங்கப்பட்டது. 100 ரூபாய்க்கு 11 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் அனைத்து காய்கறிகளும் வீட்டுமுன் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்காக வெளியே வரவேண்டாம். அவர்களின் தெருவிற்கே வந்து வினியோகம் செய்யப்படும் என நகரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story