கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் குடியிருப்பு பகுதியில் 10 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை - திருப்பூர் மாநகராட்சி நடவடிக்கை


கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் குடியிருப்பு பகுதியில் 10 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை - திருப்பூர் மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 6 April 2020 3:00 AM IST (Updated: 6 April 2020 2:06 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் குடியிருந்த பகுதியை சுற்றிலும் 10 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து அவர்கள் வசித்த குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வெளிநபர்கள் யாரும் அந்த வீதிக்குள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோல் சம்பந்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களும் வீட்டை விட்டு வெளியே நடமாட அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள்.

மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து அந்த பகுதியில் மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர் குடியிருந்த வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு சளி,காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனைகளை நேற்று மேற்கொண்டனர். இதற்காக நகர ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த செவிலியர்கள் கொண்ட 50 குழு அமைக்கப்பட்டது. 4 குழுவுக்கு ஒரு டாக்டர் வீதம் டாக்டர்கள் கண்காணித்தனர். அப்பகுதி மக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து திருப்பூர் மாநகர் நல அதிகாரி பூபதி கூறும்போது, திருப்பூர் மணியக்காரம்பாளையம் சுற்றுப்புற பகுதியில் 10 ஆயிரம் பேருக்கு நேற்று ஒரேநாளில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 25 பேருக்கு சளி, காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அது சாதாரண சளி, காய்ச்சல் தான். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள்.

இதுபோல் நாளை(இன்று) அங்கேரிப்பாளையம் ரோடு பகுதியில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்புபணிகள் உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story