முருகப்பெருமான், குலதெய்வ கோவில்களில் பக்தி கோஷம் ஒலிக்காமல் இன்று பங்குனி உத்திரம்


முருகப்பெருமான், குலதெய்வ கோவில்களில் பக்தி கோஷம் ஒலிக்காமல் இன்று பங்குனி உத்திரம்
x
தினத்தந்தி 5 April 2020 9:30 PM GMT (Updated: 5 April 2020 9:15 PM GMT)

பங்குனி உத்திர நாளான இன்று முருகப்பெருமான், குலதெய்வ கோவில்களில் பக்தர்களின் கோஷம் எதிரொலிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்,

பங்குனி உத்திரம் மிக முக்கிய ஆன்மிக நாளாகும். குலதெய்வ வழிபாட்டுக்கும், முருகப்பெருமான் வழிபாட்டுக்கும் உகந்தநாள் ஆகும். முருகப்பெருமான் அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளிலும் பங்குனி உத்திர விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

திருமண தடை நீங்க பங்குனி உத்திர நாளில் வேண்டினால் கை மேல் பலன் கிடைக்கும் என்பது பக்தர்க ளின் நம்பிக்கை. ஆகவே பங்குனி உத்திர நாளில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குவியும்.

இந்த நிலையில் கொரோனாவால் கோவில்கள் மூடப்பட்டு விட்டன. பெரும்பாலான கோவில்களில் பங்குனி திருவிழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவிழாவின் 9-வது நாளான இன்று (திங்கட் கிழமை) பங்குனி உத்திரமாகும். இந்த நாளில் முருகன் கோவில்கள், குல தெய்வமான சாஸ்தா கோவில்கள் தோறும் பங்குனி உத்திர விழா கோலாகலமாக கொண்டாடப்படும். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் ஊரடங்கு உத்தரவால் இந்த ஆண்டு கோவில்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

அதே நேரத்தில் கோவில்களில் பங்குனி உத்திர பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பக்தர்கள் கலந்துகொள்ள முடியாது என்பதால் பக்தி கோஷம் இல்லாத பங்குனி உத்திரமாக அமைகிறது, என வேதனையோடு பக்தர்கள் தெரிவித்தனர்.

Next Story