பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.70 கோடி வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.70 கோடி வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 7 April 2020 4:00 AM IST (Updated: 7 April 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.70 கோடி வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

நம்பியூர், 

நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனாவால் ஒரு உயிரிழப்புக்கூட ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இரவு, பகலாக தமிழக அரசின் ஒவ்வொரு துறையும் செயல்பட்டு வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரின் ஒருநாள் ஊதியம் ரூ.70 கோடி முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

மாணவ- மாணவிகள் நலன் கருதி 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்காக யூ டியூப் சேனல் மற்றும் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாட்டுப்புற கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு இசை நிகழ்ச்சிகள் நடத்துவோர் என அனைவருக்கும் தமிழ் வளர்ச்சி துறை மூலம் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நம்பியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கூடக்கரை, கடத்தூர், ஒழலக்கோவில், ஆண்டிபாளையம், எம்மாம்பூண்டி ஆகிய 5 ஊராட்சிகளில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சி பணியாளர்களுக்கு முக கவசங்கள், கை கழுவும் திரவம், கிருமி நாசினி ஆகியவற்றைகளை வழங்கினார். பின்னர் ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆய்வின்போது கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அதிகாரி பாவேசு ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story