கீழக்கரையில் கொரோனாவுக்கு பலியானவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 137 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - ராமநாதபுரம் கலெக்டர் தகவல்
கீழக்கரை நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவத்தை தொடர்ந்து அவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 137 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசின் உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் வேலை செய்துவிட்டு ராமநாதபுரம் திரும்பி வந்த 4,777 பேரில் தற்போதைய நிலையில் 28 நாள் நிறைவடையாத 1,940 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர். டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய 41 பேரில் 25 பேர் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் வந்துள்ளனர்.
இவர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 23 பேருக்கு நோய் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த 25 பேரின் வீடுகளை சுற்றி உள்ள 25 ஆயிரத்து 532 வீடுகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, 457 பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். கீழக்கரையில் இறந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, நோய் பரவாமல் தடுக்க சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இறந்தவரின் இறுதிச்சடங்கில் குடும்பத்தினர் உள்பட 137 பேர் கலந்துகொண்டது அடையாளம் காணப்பட்டு அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்களை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வீட்டில் ஒருவர் வெளியில் வந்து வாங்கிச்செல்ல வேண்டும். இதனை மீறி வெளியில் தேவையின்றி சுற்றி சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிமாநிலங்களில் தங்கியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1,534 பேர் உதவி கோரி இருந்தனர். அவர்களுக்கு அந்தந்த மாநிலங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் 2,753 பேர் தங்கியிருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story