மதுரையில் பரபரப்பு: ரோந்து சென்ற போலீசார் தாக்கியதில் இறைச்சி கடைக்காரர் சாவு; உறவினர்கள் சாலை மறியல்


மதுரையில் பரபரப்பு: ரோந்து சென்ற போலீசார் தாக்கியதில் இறைச்சி கடைக்காரர் சாவு; உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 April 2020 4:45 AM IST (Updated: 7 April 2020 3:14 AM IST)
t-max-icont-min-icon

ரோந்து சென்ற போலீசார் தாக்கியதில் இறைச்சி கடைக்காரர் இறந்த சம்பவத்தால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த காரை நடுரோட்டில் நிறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மதுரை கருப்பாயூரணி பகுதியில் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடைவீதியில் கோழிக்கடை நடத்திவரும் அப்துல் ரகீம் (வயது 75) என்பவர் கோழி இறைச்சி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து போலீசார், கடையை அடைக்கும்படி கூறி அவரை எச்சரித்துள்ளனர். அப்போது அவரது உறவினர் ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் போலீசார் அந்த நபரை தாக்கியதாகவும், இதனை தடுக்க முயன்ற அப்துல் ரகீமையும் போலீசார் தாக்கியதுடன் தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த அப்துல் ரகீம் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் அங்குள்ள பிரதான சாலையில் அப்துல் ரகீமின் உடலை ஒரு காரில் வைத்து, அந்த காரை நடுரோட்டில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரகீம் இறப்புக்கு காரணமான போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது மதுரையில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து போராட்டம் நடத்தியது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story