ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முடிவுக்கு வருமா? ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முடிவுக்கு வருமா? என்ற குழப்பம் நீடிக்கும் வேளையில் ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிந்து வருகிறது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தவுடனேயே, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கியிருந்து வேலை செய்து வந்த பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பஸ், ரெயில்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பஸ், ரெயில்களை தவறவிட்ட சிலர் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் படையெடுத்தனர். இன்னும் சிலர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல், ஊரடங்கு எப்போது முடியும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
ஊரடங்கு உத்தரவு முடிந்து, ஏப்ரல் 15-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து திரும்பி சென்னை வருவதற்காக, ரெயில்கள், பஸ்களில் அதிகளவில் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? அல்லது முடிவுக்கு வருமா? என்ற குழப்பத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். ஆனால் இந்த ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கு முன்பாக 3 நாட்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிக்கி தவிக்கும் பலர், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட வேண்டும் என்பதற்காக ரெயில், பஸ்களில் டிக்கெட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
டிக்கெட் முன்பதிவு 15-ந்தேதி மட்டும் அல்லாமல் 16, 17-ந்தேதிகளிலும் குவிந்து வருகிறது.
ஒரு வேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, 15-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அல்லது ஊரடங்கு 14-ந்தேதிக்கு பிறகு முடிவுக்கு வந்தாலும், சொந்த ஊர்களுக்கு செல்வோர் மற்றும் சொந்த ஊரில் இருந்து திரும்பி சென்னை வருவோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா? என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்பாக இருக்கிறது. ‘ஆம்னி’ பஸ்களில் குறைவான டிக்கெட் கட்டணம் உள்ள பஸ்களில் மட்டும் தற்போது டிக்கெட் தீர்ந்துள்ளது. மற்ற ‘ஆம்னி’ பஸ்கள் மெதுவாக முன்பதிவு ஆகி வருகிறது.
எந்த முடிவாக இருந்தாலும் அரசு விரைவாக அறிவித்தால், அதற்கேற்ப தங்களது பயணங்களை மாற்றியமைக்க உதவியாக இருக்கும் என வெளியூர் வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story