கொரோனா பாதிப்பு: திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 23 பேருக்கு சிகிச்சை


கொரோனா பாதிப்பு: திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 23 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 6 April 2020 10:15 PM GMT (Updated: 7 April 2020 5:21 AM GMT)

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர்,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 6 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 12 பேர் என கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 12 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதி கட்டிடம் கொரோனா சிறப்பு வார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தபட்டுள்ள 109 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

Next Story