தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது


தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 7 April 2020 11:00 PM GMT (Updated: 7 April 2020 5:11 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 7 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், 4 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து அந்த 11 பேருடன் நெருங்கி பழகியவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. அதன்படி 130 பேர் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் 6 பேருக்கு பாதிப்பு

இந்த நிலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த ஒரு பெண், அவரது கணவர், மாமியார் ஆகிய 3 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று பரிசோதனை முடிவில், 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆஸ்பத்திரி ஊழியருடன் நெருங்கி பழகிய 8 ஊழியர்களும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வரும் 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஆஸ்பத்திரி ஊழியர்கள் மேலும் 3 பேருக்கு இன்று (புதன் கிழமை) ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேரையும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

17 ஆக உயர்வு

மேலும் ஆத்தூரை சேர்ந்த ஒருவருக்கும், பேட்மாநகரத்தை சேர்ந்த 2 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே முடக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மட்டும் 483 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதில் 120 பேர் 28 நாட்கள் கண்காணிப்பை முடித்து உள்ளனர். மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் தூத்துக்குடியில் பரபரப்பு நிலவுகிறது.

Next Story