அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: வாழை- தென்னை மரங்கள் சாய்ந்து நாசம்


அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: வாழை- தென்னை மரங்கள் சாய்ந்து நாசம்
x
தினத்தந்தி 8 April 2020 3:00 AM IST (Updated: 8 April 2020 12:50 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை, தென்னை மரங்கள் சாய்ந்து நாசம் ஆனது.

அந்தியூர், 

ஈரோடு மாவட்டம் அந்தியூர், வட்டக்காடு, கும்பரவாணி, தோணிமடுவு, மந்தை, விளாங்குட்டை, பர்கூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் வாழை, மக்காச்சோளம் ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். அந்த பகுதியில் ஏராளமான தென்னை மரங்களும் உள்ளன.

கடந்த சில மாதங்களாக அந்தியூர் பகுதியில் நல்ல வெயில் அடித்து வந்தது. இதனால் கிடைக்கின்ற தண்ணீரை கொண்டு விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அந்தியூர் பகுதியில் நள்ளிரவு 12.30 மணிக்கு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த மழை அதிகாலை 2 மணி வரை நீடித்தது.

இதன்காரணமாக 10-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் சாய்ந்து நாசம் ஆனது. ஏராளமான தென்னை மரங்களும் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்தன. மேலும் வட்டக்காடு, கும்பரவாணி பகுதியில் 5-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டன. எனினும் இதில் யாரும் காயம் அடையவில்லை.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது.இதனால் அந்தியூர் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. எனினும் கிடைக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். தற்போது வாழைகள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்த நிலையில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நள்ளிரவு சூறாவளியுடன் பெய்த மழையால் வாழைகள், மக்காச்சோளம், தென்னை போன்றவை அடியோடு சாய்ந்துவிட்டன. நகைகளை அடகு வைத்து மிகவும் கஷ்டப்பட்டு பயிர் செய்து உள்ளோம். இந்த நிலையில் சூறாவளிக்காற்று வந்து எங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சூறாவளிக்காற்றால் சாய்ந்து உள்ள பயிர்களை கணக்கிட்டு அதற்குண்டான உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Next Story