மதுரை ரெயில்வே கோட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 38 ரெயில் பெட்டி வார்டுகள் தயார்


மதுரை ரெயில்வே கோட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 38 ரெயில் பெட்டி வார்டுகள் தயார்
x
தினத்தந்தி 7 April 2020 10:30 PM GMT (Updated: 7 April 2020 8:52 PM GMT)

மதுரை ரெயில்வே கோட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 38 ரெயில் பெட்டி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.

மதுரை, 

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ரெயில் பராமரிப்பு பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரெயில் பெட்டிகளை சிகிச்சை வார்டுகளாக மாற்ற ரெயில்வே வாரியம் முடிவு செய்தது.

இதைதொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. தென்னக ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டங்களில் ரெயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்படுகின்றன.

இந்தநிலையில், மதுரையில் உள்ள ரெயில்வே பணிமனையில் ரெயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோட்ட மேலாளர் லெனின் உத்தரவின்பேரில், மதுரை பணிமனையில் 43 ரெயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போது, 38 பெட்டிகள் முற்றிலும் பயன்படுத்தும் வகையில் வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பெட்டிகளும் ஒரு வார காலத்துக்குள் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த ரெயில் பெட்டிகளில் வெண்டிலேட்டர் கருவி, ஆக்சிஜன் சிலிண்டர்கள், குளியளறை, சமைக்கும் வசதி, கழிப்பறை மற்றும் கொசுவலை ஆகிய வசதிகள் உள்ளன. இந்த பெட்டிகள் அனைத்தும் தயாரானவுடன் நெல்லை ரெயில் நிலையத்தில் 18 பெட்டிகளும், மதுரை ரெயில்நிலையத்தில் 25 பெட்டிகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் மதுரை மற்றும் நெல்லை ரெயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும் வார்டு பெட்டிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

இதற்கிடையே, 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மட்டுமே சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த பெட்டிகளில் நோயாளிகளுக்கான படுக்கை வசதி உரிய முறையில் இருக்காது என்று டாக்டர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது, அகலமான படுக்கைகள் 2-ம் வகுப்பு பெட்டியில் கிடைக்காது. அதற்கு பதிலாக 2 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி மற்றும் முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் உள்ள இருக்கைகள் நோயாளிகளுக்கான படுக்கைகளுக்கு ஏற்றவகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Next Story