மதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பு: 13 பெட்டிகளில் இருந்த உயர்ரக மதுபாட்டில்கள் கொள்ளை
மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து, 13 பெட்டிகளில் வைத்திருந்த உயர்ரக மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
மதுரை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கும் நிகழ்வும் நடந்து வருகிறது. அவ்வாறு விற்பவர்களை போலீசார் கைது செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதியில் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் பின்வாசலில் உள்ள மது பார் கதவு திறந்து கிடப்பதாக தகவல் வந்தது. உடனே அங்கு திடீர் நகர் போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு மதுபான பாரின் பின்வாசல் பகுதி வழியாக மர்ம நபர்கள் உள்ளே புகுந்து மதுக்கடையின் கதவை உடைத்து திறந்திருப்பது தெரியவந்தது. மேலும் அங்கு 13 பெட்டிகளில் இருந்த உயர் ரக மதுபாட்டில்களை கொள்ளையடித்து, அதனை வேறு பைகளில் வைத்து கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என்று கூறப்படு கிறது. இது குறித்து டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் குணசேகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் சில நாட்களாக திடீர்நகர், மேலவாசல் பகுதியில் திருட்டுத்தனமாக 4 பேர் மது விற்று வந்தது தெரியவந்தது. எனவே அவர்கள்தான் மதுக்கடையில் கொள்ளையடித்து, திருட்டுதனமாக மது விற்றிருக்கலாம் என்று தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் மறைந்திருந்த அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story