கொரோனா தடுப்பு நடவடிக்கையை கேலி செய்வோர் நாட்டின் விரோதிகள் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


கொரோனா தடுப்பு நடவடிக்கையை கேலி செய்வோர் நாட்டின் விரோதிகள் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 7 April 2020 10:00 PM GMT (Updated: 7 April 2020 9:15 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கையை கேலி செய்பவர்கள் நாட்டின் விரோதிகள் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கலில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஏ.ஏ.ஏ பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து கிருமி நாசினி தெளிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கேலி செய்பவர்கள் இந்த நாட்டின் விரோதிகளாகத்தான் இருக்க முடியும். குறை சொல்வதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும்.

இது அரசர் காலம் முதல் இப்போது வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. காலையில் இட்லி கொடுத்தால் ஏன் பொங்கல் கொடுக்க மாட்டீர்களா என்பார்கள். மதியம் சாப்பாடு கொடுத்தால் ஏன் பிரியாணி கொடுக்க மாட்டீர்களா என்பார்கள். குறை சொல்பவர்கள் நிச்சயமாக நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். குறை சொல்பவர்கள் அவர்கள் என்ன சமூக பணிகளை செய்தார்கள்? என்று நினைத்து பார்த்தால் குறை சொல்ல மாட்டார்கள்.

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று 9 நிமிடங்கள் தீப ஒளி ஏற்றி அதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமை, தமிழகத்தின் ஒற்றுமை உலகிற்கு பறைசாற்றப்பட்டுள்ளது.

சமூக பணியில் குறை கூறி கொண்டிருக்காமல் அரசுடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் இந்தியாவைவிட்டு கொரோனா வைரசை விரட்டியடிக்க முடியும். கடவுள் இல்லை என்று பேசுவோர் மத்தியில் கடவுளை பற்றி பேசினால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story