ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரியும் வாலிபர்கள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தடையை மீறி மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரியும் வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி,
வடமாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருவதால் அங்கு மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஆனால் தமிழகத்தில் தடை உத்தரவை மீறுவோரை போலீசார் எச்சரித்து மட்டும் அனுப்பி வைப்பதால் பொதுமக்கள் அலட்சியமாக சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தினந்தோறும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்த நேரத்தில் மட்டும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு விரைவில் வீடுகளுக்கு சென்றுவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களாக காரைக்குடி பகுதியில் இளைஞர்கள் சிலர் எவ்வித காரணமும் இல்லாமல் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்து வருகின்றனர். இதில் பலரும் முக கவசத்தை அணியாமல் செல்கின்றனர். போலீசாரும் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து மட்டுமே அனுப்பி வைக்கின்றனர். சில இடங்களில் போலீசார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தாலும் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிவது வாடிக்கையாகி வருகிறது. எனவே காரணமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரியும் வாலிபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் கொரோனா நோய் பரவலை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:- பொதுமக்கள் நலன் கருதி மத்திய-மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதை இளைஞர்கள், பொதுமக்கள் புரிந்துகொண்டு போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு பொறுப்பில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிவதால் கொரோனா வைரஸ் பிறருக்கும் பரவி பாதிப்பு ஏற்படும் என்று அவர்களுக்கு தெரிந்தும் கூட அலட்சிய போக்கை கடைபிடித்து வருகின்றனர். இவ்வாறு கூறினர்.
Related Tags :
Next Story