டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்: சிவகங்கையில் தனி வார்டில் கண்காணிக்கப்பட்டவர் திடீர் சாவு
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்ததால், சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் கண்காணிக்கப்பட்டவர் நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார்.
சிவகங்கை,
டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 47 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேருக்கும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்ற 42 பேருக்கும் கொரோனா இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த 42 பேரில் எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவரும் ஒருவர் ஆவார். தனி வார்டில் இருந்த அவர் நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார்.
இதுகுறித்து மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல் கூறியதாவது:-
தற்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்த முதியவர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்ததாக கடந்த 1-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. எனினும் அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு, சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து வந்த காரணத்தால் அவரை மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story