இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்து சிக்கியவர்களுக்கு தண்டனை காத்திருக்கு
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சிலர் பொறுப்பற்ற முறையில் இரு சக்கரவாகனங்களில் சென்று போலீசாரிடம் சிக்குகிறார்கள். உடனே அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனை காத்திருக்கிறது.
திருத்தங்கல்,
ஊரடங்கு காலத்தில் போலீசாருக்கு பெரும் சவாலாக இன்றளவும் இருப்பது இரு சக்கரவாகனத்தில் சுற்றித்திரிவோரை கட்டுப்படுத்துவதுதான். ஒரு சிலர் மட்டுமே அத்தியாவசியத்துக்காக வாகனங்களில் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். பெரும்பாலானோர் பொறுப்பற்ற நிலையில் திரிபவர்கள்தான்.
வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கிறார்கள். அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்து விடுகிறார்கள். ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை நகலை மட்டும் வாங்கிக்கொண்டு வெளியே விட்டுவிடுவதால் பலர் இதனை பொருட்படுத்தாமல் உள்ளனர். ஆனால் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படுகிறது. அதன் மூலம் பின்னர் எப்படி சிக்கப்போகிறோம் என்பதை பலர் உணரவில்லை.
ஜெயிலில் தள்ளவாய்ப்பில்லை, அந்த அளவுக்கு இடவசதி இல்லை, கோர்ட்டுக்கும் கொண்டு செல்ல முடியாது இதையெல்லாம் கருதியே போலீசார், வழக்குபதிவு செய்து விட்டு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகுதான் தண்டனை இருக்கிறது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் கூறியதாவது:-
தடை உத்தரவு காலத்தில் இரு சக்கரவாகனத்தில் சென்று சிக்குவோர் மீது இந்திய தண்டனை சட்டம் 269, 270 மற்றும் பிரிவு-3, 188, 54 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம். இதில் விருதுநகர் மாவட்டத்தில் பிரிவு- 3 மற்றும் 188-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரிவுகளில் சிக்கியிருப்பவர்களுக்கு 6 மாதம் சிறை மற்றும் அபராதம் விதிக்க இடமுள்ளது. இதனை கோர்ட்டு தீர்மானிக்கும். ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பிறகு இதற்கான நடைமுறையை போலீசார் மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் சுற்றித்திரிந்து சிக்கியவர்கள் தண்டனை காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி. மேலும் அரசு ஊழியர்கள் சிலரும் இந்த வகையில் மாட்டியுள்ளனர். தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் வேலைக்கே அது வேட்டு வைக்கும்.
மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிராமப்பகுதிகளுக்கு மினி வேன்களில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு விடும் நிலையிலும் கிராமங்களில் இருந்து தேவையில்லாமல் இளைஞர்கள் தடையை மீறி இரு சக்கரவாகனங்களில் வருவதாகவும் அவர்களை வீடுகளுக்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினால் தேவையில்லாமல் பிரச்சினை செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான கடைகள் பூட்டப்பட்ட பிறகும் நகர்ப்புறங்களில் இரு சக்கரவாகனங்களில் சமூக விலகலை புறக்கணித்து செல்லும் நிலை உள்ளதால் இரு சக்கரவாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு அரசு கட்டுப்பாடு விதித்தால் இரு சக்கரவாகனங்களின் நடமாட்டம் குறையும்” என்றும் தெரிவித்தார்.
இதுபற்றி கலெக்டர் கண்ணனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு அறிவுறுத்தியபடிதான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கையில் பெட்ரோல் பங்குகளில் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது குறித்து தமிழக அரசுதான் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story