தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சளி-காய்ச்சல் உள்ளதா? என வீடு, வீடாக அதிரடி ஆய்வு - சுகாதாரத்துறை அதிகாரிகள்
தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு, வீடாக சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சளி, காய்ச்சல் உள்ளதா? என்று 38 ஆயிரம் பேரிடம் விவரம் சேகரித்து உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் அருண்குமார் தலைமையில் அதிகாரிகள், பணியாளர்கள், மாநகரின் முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்துகிறார்களா? என்று கண்காணித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராமசாமிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் முடக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ராமசாமிபுரம் அருகே உள்ள போல்டன்புரத்தை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர், அவருடைய கணவர், மாமியார் ஆகிய 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அதிரடி ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், கள அலுவலர்கள் உள்பட 320 பேர் இந்த பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். இவர்கள் ராமசாமி புரம், போல்டன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? என்று விவரங்களை சேகரித்தனர். சளி, காய்ச்சல் உள்ளதா? என்றும் பரிசோதித்து உள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள 12 ஆயிரத்து 200 வீடுகளில் உள்ள 38 ஆயிரம் பேரிடம் விவரங்கள் சேகரித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 5 பேருக்கு லேசான தொண்டை வலி, சளி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து தினமும் அவர்களை கண்காணித்தும் வருகின்றனர்.
483 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
இதுதவிர வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 483 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதில் 140 பேர் 28 நாட்கள் முழுமையாக முடித்து உள்ளனர். இதுவரை அவர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை. மற்றவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் முடக்கி வைக்கப்பட்ட பகுதி மக்கள் வெளியில் வருவது தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட் கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி 30 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, தினமும் ரூ.200 மதிப்பிலான காய்கறி தொகுப்பு மற்றும் மளிகை பொருட்களை வீடு, வீடாக சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story