குமரியில், கொரோனா தடுப்பு பணியில் தேசிய மாணவர் படை - 14 குழுக்களாக பணிபுரிகின்றனர்


குமரியில், கொரோனா தடுப்பு பணியில் தேசிய மாணவர் படை - 14 குழுக்களாக பணிபுரிகின்றனர்
x
தினத்தந்தி 10 April 2020 4:30 AM IST (Updated: 10 April 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் போலீசாருக்கு உதவியாக கொரோனா தடுப்பு பணியில் தேசிய மாணவர் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் 14 குழுக்களாக பணிபுரிகின்றனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பரவாமல் இருக்க கடைகளுக்கு கூட்டம், கூட்டமாகச் செல்லாதீர்கள், ரேஷன் கடைகள் போன்றவற்றில் சமூக இடைவெளிவிட்டு நின்று பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என்று போலீசார் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் கூட்டம் கூடுவது குறையவில்லை.

எனவே கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கொரோனா தடுப்பு பணியில் தேசிய மாணவர் படையினரையும் ஈடுபடுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக குமரி மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 170 தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் 14 என்.சி.சி. மற்றும் ராணுவ அதிகாரிகள் இணைந்து 14 குழுக்களாக பிரிந்து குமரி மாவட்ட கொரோனா தடுப்பு பணியில் நேற்று முதல் ஈடுபட்டனர்.

அதாவது நேற்று காலையில் 20 தேசிய மாணவர் படை மாணவர்கள் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களுடன் என்.சி.சி. முதன்மை அதிகாரி அருள்ராஜ் மற்றும் ராணுவ அதிகாரி ஒருவரும் வந்திருந்தனர். பின்னர் கோட்டார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தேசிய மாணவர் படை மாணவர்கள் 20 பேருக்கும் சில ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது, பணிபுரியும் இடங்களில் மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும், பொதுமக்களிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசக்கூடாது. கனிவாக பேசி கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றச் செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட 4 சந்தைகளுக்கு தலா 2 பேர் வீதம் 8 பேரும், 6 ரேஷன் கடைகளுக்கு தலா 2 பேர் வீதம் 12 பேருமாக மொத்தம் 20 தேசிய மாணவர் படையினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுடன் போலீசாரும், ராணுவ அதிகாரியும் இணைந்து பணியாற்றினர். சந்தைகளில் கூட்டம் குறைந்ததும் அங்கு பணியில் இருந்த தேசிய மாணவர் படையினர் 8 பேரும் வங்கிகளில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்தவும், மக்கள் இடைவெளி விட்டு நிற்க அறிவுறுத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேபோல் தக்கலை போலீஸ் நிலையத்துக்கு 24 பேரும், குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு 7 பேரும், பளுகல் போலீஸ் நிலையத்துக்கு 10 பேரும், புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு 8 பேரும், இரணியல் போலீஸ் நிலையத்துக்கு 20 பேரும், அருமனை போலீஸ் நிலையத்துக்கு 12 பேரும், மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு 13 பேரும், கருங்கல் போலீஸ் நிலையத்துக்கு 8 பேரும், திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு 10 பேரும், கொல்லங்கோடு போலீஸ் நிலையத்துக்கு 10 பேரும், மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு 12 பேரும், கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு 7 பேரும், தென்தாமரைக்குளம் போலீஸ் நிலையத்துக்கு 9 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் என்.சி.சி. அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 14 போலீஸ் நிலையங்களுக்கு 170 தேசிய மாணவர் படையினரும், 14 அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2-வது கட்டமாக இன்னும் சில நாட்களில் மேலும் மீதமுள்ள போலீஸ் நிலையங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக தேசிய மாணவர் படையினர் நியமிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story