சென்னிமலை, அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை - ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன
சென்னிமலை மற்றும் அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சூறாவளிக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள், 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. இதேபோல் நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சென்னிமலை, அண்ணாமலைபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளிக்காற்றால் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நேந்திரம், கதலி வகைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து விழுந்தன. இதன்காரணமாக விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் அம்மாபேட்டை அருகே உள்ள கொமராயனூர், தேவலன்தண்டா, சென்னம்பட்டி, கோனேரிப்பட்டி, பூதப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நேந்திரம், கதலி, செவ்வாழை வகைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசம் ஆனது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நகைகளை அடகு வைத்து கோடை வறட்சியிலும் கிடைக்கின்ற தண்ணீரை பயன்படுத்தி மிகவும் கஷ்டப்பட்டு நேந்திரம், கதலி, செவ்வாழை ஆகிய வகைகளை சேர்ந்த வாழைகளை பயிரிட்டு உள்ளோம். தற்போது அறுவடை செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழைத்தார்களை அறுத்து விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தோம். கிடைத்த விலைக்கு கொடுக்க விரும்பினால் கூட வாங்க வியாபாரிகள் வருவதில்லை. என்னசெய்வதென்றே வழி தெரியாமல் தவித்து வருகிறோம். இந்த நிலையில் இயற்கை கூட எங்களுக்கு கை கொடுக்க மறுத்துவிட்டதே என எண்ணும்போது மிகவும் கவலையாக உள்ளது. எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி விட்டது. உரிய இழப்பீடு கிடைக்காவிட்டால் எங்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாவிடும்.
எனவே சூறாவளிக்காற்றால் சாய்ந்து விழுந்த வாழைகளுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
Related Tags :
Next Story