சாப்டூர் அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வனத்துறை பாதைகள் மூடல் - விலங்குகள் நடமாடும் பகுதி கண்காணிப்பு
சாப்டூர் அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வனத்துறை பாதைகள் மூடப்பட்டன. மேலும் வனப்பகுதியில் விலங்குகள் நடமாடும் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பேரையூர்,
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் புலி ஒன்று பாதிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, காட்டெருமைகள், மான் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் வனத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுகுறித்து சாப்டூர் வனத்துறை அதிகாரி சீனிவாசன் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்ட வன அலுவலர் முகமது சபாப் உத்தரவின் பேரில் வனவிலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் சாப்டூர் வனப்பகுதி எல்லையான கேணி, வாழைதோப்பு, மள்ளப்புரம் சோதனை சாவடி மற்றும் விருதுநகர் மாவட்டம் அய்யன்கோவில், மாவூற்று, தாணிப்பாறை வழியாக யாரும் வனத்திற்குள் செல்லாதவாறு இரும்பு தடுப்பு அரண்கள் வைத்து மூடப்பட்டுள்ளது. மேலும் வனத்திற்குள் உள்ள சிறிய பாதைகள் அனைத்தும் முட்களால் அடைக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியை கண்காணிக்க 40 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கண்காணித்து வருகின்றனர். அடிவாரங்களில் வனவிலங்குகள் நடமாடும் பகுதி, தண்ணீர் குடிக்க வைக்கப்பட்டு இருக்கும் தொட்டிகள் தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடிவாரத்தில் சுற்றி திரியும் குரங்குகளுக்கு யாரும் உணவு அளிக்கக்கூடாது.
அடிவாரப்பகுதியில் காட்டெருமைகள் மற்றும் மான்கள் நடமாட்டம் இருந்தால் அதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுக்கலாம். வனத்திற்குள் அத்துமீறுவோர் மீது வனத்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story