ராமேசுவரத்தில் மல்லிகை செடிகளை ஆடுகளுக்கு இரையாக்கும் அவலம் - பூ சாகுபடி விவசாயிகளின் பரிதாப நிலை
ஊரடங்கு உத்தரவால் ராமேசுவரத்தில் மல்லிகை செடிகளை ஆடுகளுக்கு இரையாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பூ சாகுபடி விவசாயிகள் வருவாய் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் அதிகம் உள்ள ராமேசுவரம் தீவு பகுதியில் மல்லிகை செடி உற்பத்தியும், பூ விவசாயமும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ராமேசுவரம் தீவு பகுதியில் மல்லிகை செடி உற்பத்தி மற்றும் பூ விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பூத்துக்குலுங்கும் பூக்கள், மல்லிகை செடிகளை விவசாயிகள் ஆடுகளுக்கு இரையாக்கி வருகின்றனர்.
இதுபற்றி தங்கச்சிமடத்தில் 45 ஆண்டுகளாக மல்லிகை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் வடிவேலு கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடையை வரவேற்கிறோம். ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், அக்காள்மடம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை செடி மற்றும் பூ விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். தீவில் மட்டும் மல்லிகை விவசாயத்தை நம்பி 1,200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இங்கிருந்து மல்லிகை பூக்கள் வாகனங்கள் மூலம் மதுரை, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தயார் செய்யப்படும் மல்லிகை செடிகள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல ஊர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் மல்லிகை பூ சீசன் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இருக்கும். தற்போது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சீசன் தொடங்கியுள்ள போதிலும் ஊரடங்கு உத்தரவால் வாகனங்கள் எதுவும் ஓடாததாலும், கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளதாலும் வியாபாரிகள் யாரும் மல்லிகை பூக்களை வாங்க வருவது கிடையாது. வாகனங்கள் மூலமும் அனுப்பி வைக்க முடியாத நிலை உள்ளது.
மேலும் மல்லிகை பூக்களை பறிக்கவும் ஆட்கள் வருவது கிடையாது. அப்படியே பறித்தாலும் அதை வாங்க ஆள் இல்லை. இதனால் செடிகளில் பூத்து பூக்கள் வீணாவதை விட ஆடுகளுக்கு இரையாக்கி வருகிறோம். ஊரடங்கு உத்தரவால் ராமேசுவரம் தீவு பகுதியில் மல்லிகை பூக்கள் சாகுபடி மற்றும் செடி விற்பனையும் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மல்லிகை விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள் அனைவருக்கும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரத்தை தவிர தமிழகத்தின் மற்ற ஊர்களில் நடைபெற்று வரும் மல்லிகை விவசாயத்திற்கு அரசு மூலம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம் தீவு பகுதியில் நடைபெற்று வரும் மல்லிகை விவசாயத்திற்கு இதுவரை இலவச மின்சாரம் கிடையாது. ராமேசுவரத்தில் மல்லிகை விவசாயிகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் எந்த சலுகைகளும் கிடைப்பது இல்லை. எனவே ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மல்லிகை விவசாயிகளை கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்கவும், மல்லிகை விவசாயத்திற்கும் இலவச மின்சாரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மல்லிகை விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story