ராமநாதபுரம், விருதுநகரில் கொரோனா பரிசோதனைக்கு வந்த கருவி


ராமநாதபுரம், விருதுநகரில் கொரோனா பரிசோதனைக்கு வந்த கருவி
x
தினத்தந்தி 10 April 2020 11:00 PM GMT (Updated: 10 April 2020 10:11 PM GMT)

ராமநாதபுரம், விருதுநகருக்கு கொரோனா பரிசோதனைக்கு கருவிகள் வந்துள்ளன.

ராமநாதபுரம், 

நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கண்டறிய தற்போது கொரோனா பி.சி.ஆர். கிட் எனப்படும் நவீன பரிசோதனை கருவி பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் பல பரிசோதனைகளை துல்லியமாக கண்டறிந்து முடிவுகளை அறிவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பரிசோதனை கருவிகளை தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கருவிகள் ராமநாதபுரம் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளன.

இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அல்லி கூறியதாவது:-

கொரோனா பரிசோதனைக்காக இந்த பி.சி.ஆர். கருவி தற்போது வந்துள்ளது. இந்த கருவியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 3 பேர் தேர்வு செய்யப்பட்டு மதுரை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 3 நாட்கள் பயிற்சிக்காக சென்றுள்ளனர். இவர்கள் பயிற்சி முடிந்து வந்ததும் இந்த புதிய கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ள இந்த பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனைகளை ராமநாதபுரத்திலேயே மேற்கொண்டு உடனுக்குடன் முடிவுகளை தெரிந்து கொண்டு அதன்மூலம் சிகிச்சைகளை தீவிரப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருவி குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் நேற்று தெரிவித்ததாவது:-

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் 54 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனை நடத்துவதற்காக ஏற்கனவே 60 பி.சி.ஆர். கிட் எனப்படும் மருத்துவ உபகரணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 100 உபகரணங்கள் இன்று வந்துள்ளது. இந்த உபகரணம் மூலம் சோதனை முடிவை கண்டறிய 6 மணி நேரம் ஆகும். 30 நிமிடங்களில் சோதனை முடிவை கண்டறிவதற்கான ‘ரேபிட் கிட்’ என்ற உபகரணம் அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.

மாவட்டத்தை பொறுத்தமட்டில் வேறு யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை. மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story