மூச்சுத்திணறல், காய்ச்சல் உள்ளதா? குமரியில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு


மூச்சுத்திணறல், காய்ச்சல் உள்ளதா? குமரியில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு
x
தினத்தந்தி 10 April 2020 10:30 PM GMT (Updated: 11 April 2020 4:02 AM GMT)

மூச்சுத்திணறல், காய்ச்சல் உள்ளதா? என குமரியில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றும் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 8 பேர் இறந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் இதுவரை 15 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, டெல்லியில் நடந்த மாநாட்டுக்கு சென்று வந்த வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த 2 பேர், தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த 2 பேர், மணிகட்டி பொட்டலைச் சேர்ந்த சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர் ஆகியோருக்கு தான் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் 5 பேருக்கும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவரின் மூலமாக அவருடைய 88 வயது பாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கை இதற்கு மேல் அதிகரித்துவிடக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், போலீசார் என அனைத்து துறையினரும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அப்படி இருந்தும் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவரின் குடும்பத்தினர் 4 பேருக்கும், மணிக்கட்டிப் பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினர் 4 பேர், தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்தவரின் மனைவி என மேலும் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கை உள்ள வெள்ளாடிச்சிவிளை பகுதியில் நேற்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் மதுசூதனன் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், கோட்டாட்சியர் மயில், நகர்நல அதிகாரி கின்சால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டைச் சுற்றிலும் 2 ஆயிரம் வீடுகள் சுற்றளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி தடுப்புகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் மூச்சுத்திணறல், சளி, காய்ச்சல் ஆகியவற்றால் அவதிப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி வீடு, வீடாக சென்று மேற்கண்ட பிரச்சினை உள்ளவர்கள் பற்றிய பட்டியல் தயாரிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தாமாகவே வந்து அரசு ஆஸ்பத்திரிகளில் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story