டெல்லியில் இருந்து விருதுநகர் திரும்பியவர்களுடன் ரெயிலில் வந்த 45 பேரை கண்டறிய நடவடிக்கை - மருத்துவ பரிசோதனை செய்யவும் ஏற்பாடு


டெல்லியில் இருந்து விருதுநகர் திரும்பியவர்களுடன் ரெயிலில் வந்த 45 பேரை கண்டறிய நடவடிக்கை - மருத்துவ பரிசோதனை செய்யவும் ஏற்பாடு
x
தினத்தந்தி 11 April 2020 9:30 PM GMT (Updated: 11 April 2020 9:27 PM GMT)

டெல்லியில் இருந்து விருதுநகர் திரும்பியவர்களுடன் அதே ரெயிலில் பயணம் செய்த 45 பேரை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், 

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்டறிய மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு தமிழகம் திரும்பியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். விருதுநகர் மாவட்டத்திலும் இதுவரை 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10 பேர் டெல்லி சென்று திரும்பியவர்களாவர்.

டெல்லி சென்று திரும்பியவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 9 பேர் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் 7 பேருக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். எனினும் சுகாதாரத்துறையினர் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 1948 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதில் 81 பேருக்கு 2 நாட்களாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 54 பேருக்கு பாதிப்பு ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு ரெயில் மூலம் விருதுநகர் திரும்பியவர்களுடன் அதே ரெயில் பெட்டியில் பயணித்த 45 பேரின் பெயர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் ரெயில்வே துறையினரிடம் இருந்து பெற்றுள்ளது. அவர்கள் மாவட்டத்தின் எந்த பகுதியில் உள்ளனர் என்பது குறித்து கண்டறிய சுகாதாரத்துறை மூலமும், வருவாய்த்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு சிலர் அண்டை மாவட்டங்களுக்கு சென்று இருக்கலாம். அவர்களை பற்றிய விவரங்களையும் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த 45 பேரையும் கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்துவதுடன் அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி தொடர் கண்காணிப்பில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை எடுத்து முடிப்பதற்கு சிறிது காலதாமதமானாலும் இந்த நடவடிக்கையின் மூலம் மாவட்டத்தில் வேறு எந்த பகுதியிலாவது கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும் என மாவட்ட நிர்வாகம் கருதுகிறது. எனவே இந்த நடவடிக்கையை முனைப்புடன் செய்து முடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Next Story