மதுரையில் கொரோனா பாதித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீர் போராட்டம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை
மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதுரை,
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் பலியானார். அதை தொடர்ந்து அவர் வசித்த பகுதியை சுற்றியுள்ள அனைத்து தெருக்களும் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலின்படி போலீசார் தடுப்புகள் அமைத்து அங்குள்ள மக்கள் வெளியே வர தடை விதித்தனர்.
மேலும் அந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பாக அத்தியாவசிய தேவைகளான காய்கறி, தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பகுதியில் வந்து விற்கப்படும் பொருட்களை மட்டும் தான் அங்குள்ளவர்கள் வாங்கும் நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் நாட்கள் செல்ல செல்ல அவர்களிடம் அங்கு விற்கப்படும் பொருட்களை வாங்க போதிய வருமானம் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் திடீரென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் கூறும் போது, நாங்கள் அனைவரும் கூலித்தொழிலாளிகள் என்பதால் வெளியே சென்றால் தான் வருமானம். அந்த வருமானம் மூலம் தான் தேவையான பொருட்களை வாங்க முடியும். அப்படி இல்லை என்றால் நாங்கள் கடன் வாங்குவதற்காக வெளியே செல்ல வேண்டும். எனவே எங்களை வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
உடனே அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story