நெல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 17,672 வீடுகள் தீவிர கண்காணிப்பு
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 17,672 வீடுகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றன.
நெல்லை,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் சிறப்பு அலுவலர்களாக கருணாகரன் ஐ.ஏ.எஸ், மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று காலை நெல்லை வந்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. கருணாகரன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு பிறகு சிறப்பு அலுவலர் கருணாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தேன். நடைபெற்று வரும் பணிகள் குறித்து விரிவாக கூறினார்கள்.
கலெக்டர், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 55 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் வீடு திரும்பி இருக்கிறார். அவர், 14 நாட்கள் தனிமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளார். அவரையும் மருத்துவத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். நெல்லை மாவட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். கொரோனா பரிசோதனை செய்யும் கருவி விரைவில் நெல்லைக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-
அரசியல் பிரமுகர்கள் கொரோனா நிவாரண உதவி செய்ய வேண்டாம் என கூறவில்லை. மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கினால், முறையாக பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஆதரவற்றவர்களுக்கு காப்பகம் திறக்கப்பட்டு, அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஆதரவற்ற இல்லங்கள், நிவாரண உதவிகள் வழங்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு கொடுக்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களுக்கு உணவு வழங்குவார்கள்.
17,672 வீடுகள்...
வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியே வர வேண்டும் என்ற 3 நிற அட்டை மேலப்பாளையத்தில் மட்டும் வழங் கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த கிழமைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவார்கள். நெல்லை மாவட்டத்தை மேலப்பாளையம், நெல்லை டவுன், கோடீஸ்வரன் நகர், பேட்டை, பாளையங்கோட்டை, பத்தமடை, களக்காடு, வள்ளியூர் என 8 கொரோனா மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டலங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 672 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வீடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
சில தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தனிமை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 200 படுக்கைகள் தயாராக உள்ளது. தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்வோம். அரிசி, பருப்பு, மைதா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரசவ வார்டு
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு தனியாக அமைக்கப்பட்டு உள்ளது. கார்ப்பிணி பெண்கள் எந்நேரத்திலும் ஆஸ்பத்திரியில் சேரலாம். அவர்களுக்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள் தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், மாவட்ட சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story