தென்காசி மாவட்டத்தில் அக்காள்-தங்கை உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் அக்காள்-தங்கை உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் 2 எண்ணிக்கையில் தொடங்கி நேற்று முன்தினம் வரை 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிலர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அக்காள்-தங்கை
அவர்களை தனிமை வார்டில் அனுமதித்து ரத்தம், சளி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அதில் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புளியங்குடியைச் சேர்ந்த 72 வயது முதியவரின் மகள்களும், அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணும் ஆவார்கள்.
அக்காள்-தங்கை உள்பட 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால், தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.
20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புளியங்குடியில் நேற்று மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போலீசாரின் வாகன சோதனையும் கடுமையாக்கப்பட்டு உள்ளது. நகராட்சி, போலீசார் இணைந்து இரவு முதலே அந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வசிக்கும் தெருக்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story