ஊரடங்கிலும் விவசாய பணிகள் விறுவிறுப்பு - விலை அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை
ஊரடங்கிலும் விவசாய பணிகள் விறுவிறுப்பை அடைந்தன. கொரோனா காரணமாக விளை பொருட்களுக்கு விலை அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
போடிப்பட்டி,
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் அதிக வருவாய் தரக்கூடியது என்ற அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆனாலும் அடிக்கடி வரத்து அதிகரித்து விலை குறைவதால் விவசாயிகள் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.ஆனாலும் நடைமுறை சிக்கல்களால் விவசாயிகள் பல இழப்பை சந்திக்கின்றனர்.
மேலும் விவசாய பணிகளின்போது சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கடினம் என்பதால் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு அச்சம் உள்ளது.இதனால் பல இடங்களிலும் நடவு உள்ளிட்ட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வரும் காலங்களில் காய்கறி உற்பத்தி குறைந்து விலை உயரும் வாய்ப்புள்ளதால் தங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தற்போது இந்த ஊரடங்கிலும் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகள் விறுவிறுப்பை அடைந்து உள்ளன. அனைத்து தொழில்களும் முடங்கி உள்ள நிலையில் தற்போது விவசாய பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் உடுமலையை அடுத்த ஆர் வேலூர் பகுதியில் விவசாய கூலித்தொழிலாளர்கள் ஆர்வமுடனும் தைரியத்துடன் விவசாயப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஆர்.வேலூர் பகுதியில் பீட்ரூட் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி லோகநாதன் கூறியதாவது:-
தற்போதைய இக்கட்டான சூழலில் விவசாயப்பணிகள் மேற்கொள்வது மிகவும் கடினமாகவே உள்ளது.ஆனாலும் மற்ற தொழில்கள் நிறுத்தப்பட்டால் இரவு பகலாக உழைத்து உற்பத்தியை பெருக்கவும் வருவாயை அதிகரிக்கவும் முடியும்.ஆனால் விவசாயப்பணிகளைப் பொறுத்தவரை பருவத்தே பயிர் செய் என்பதைத் தவறவிட்டால் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.ஏனென்றால் இரவு பகலாக உழைத்தாலும் 60 நாட்களில் விளையும் பீட்ரூட்டை 20 நாட்களில் விளைய வைக்கமுடியாது.
எங்கள் பகுதியைப்பொறுத்தவரை கூலித்தொழிலாளர்கள் தட்டுப்பாடு அதிக அளவில் இல்லை. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியான ஊரடங்கால் கூலித்தொழிலாளர்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.மேலும் தற்போது இந்த பகுதிக்கு பி.ஏ.பி பாசன நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.எனவே 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி முழு வீச்சில் பீட்ரூட் விதைகளை நடவு செய்யும் பணியை தொடங்கியுள்ளோம். தற்போது எல்லா பகுதிகளிலும் விவசாயப்பணிகள் மந்தமாகவே உள்ளது.இதனால் காய்கறிகள் உற்பத்தி குறைந்து அறுவடை சமயத்தில் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story