மராட்டியத்தில் பாதிப்பு 2,684; பலி 178; கொரோனாவை கட்டுப்படுத்த 2 நிபுணர் குழு


மராட்டியத்தில் பாதிப்பு 2,684; பலி 178; கொரோனாவை கட்டுப்படுத்த 2 நிபுணர் குழு
x
தினத்தந்தி 15 April 2020 4:56 AM IST (Updated: 15 April 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 684 ஆக உயர்ந்து உள்ளது. பலி 178 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த 2 நிபுணர் குழுவை மாநில அரசு அமைத்தது.

மும்பை, 

உலக நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தில் தனது கோரப்பிடியை இறுக்கி வருகிறது. 

தலைநகர் மும்பையில் இந்த நோயின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்த நோயால் நேற்று ஒரே நாளில் மட்டும் 350 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 684 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் 18 பேர் பலியானார்கள். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்து உள்ளது.

அதே நேரத்தில் இதுவரை 259 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரம் காட்டி உள்ளது. அதில் ஒரு நடவடிக்கையாக மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 2 குழுவை அமைத்து உள்ளது. இதில் ஒரு குழு கிராண்ட் அரசு மருத்துவ கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர் அவினாஷ் சுபே தலைமையிலும், மற்றொரு குழு முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் பி.பி.தோகே தலைமையிலும் அமைக்கப்பட்டு உள்ளது. அவினாஷ் சுபே தலைமையிலான நிபுணர் குழு மும்பையிலும், பி.பி.தோகே தலைமையிலான குழு மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை பரிந்துரைக்கும்.

இந்த தகவலை மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே தெரிவித்தார்.

Next Story