தூத்துக்குடியில் கொரோனா சமூக பரவல் இல்லை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் ஏற்படவில்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று மாலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு மூதாட்டி இறந்து உள்ளார். 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் உள்ள 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் 55 ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு தினமும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.
மக்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதியவர்கள், கர்ப்பிணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. நடமாடும் ஏ.டி.எம். மையமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. முதல்–அமைச்சர் உத்தரவின்படி அதிக அளவில் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் சுமார் 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
370 மாதிரிகள் ஏற்கனவே எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்று (அதாவது நேற்று) 150 மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால் சமூக பரவல் ஏற்படவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.
ஆனாலும் தூத்துக்குடி மாவட்டம் ஹாட்ஸ்பாட்டாக மத்திய அரசு வரையறை செய்து உள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும்.
அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான 10 வகையான பொருட்கள் அனைத்தும் நெல்லையில் இருந்து தினமும் வருகிறது. போதுமான அளவு முககவசம் மற்றும் உபகரணங்கள் இருப்பு உள்ளது. ஆனால் சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கும் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் பணிகள் முடிக்கப்பட்டு, அனுமதிக்காக காத்திருக்கிறோம். மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 200 மாதிரிகள் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒரு நோயாளிக்கு ரூ.300 மதிப்பிலான சத்தான உணவு தினமும் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வெளியில் வரும்போது முககவசம் அணிந்துதான் வர வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் 100 சதவீதம் இந்த நோயை விரட்ட முடியும். பொதுமக்கள் மொத்தமாக தேவையான பொருட்களை வாங்கி செல்ல வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் பெரும்பாலும் வழங்கப்பட்டு உள்ளன.
கொரோனா வார்டில் பணியாற்றி வரும் டாக்டர்கள், நர்சுகள் யாரும் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் விடுதிகளில்தான் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். முழுமையாக பணி முடிந்த பிறகு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 7 பேர் வேகமாக குணமடைந்து வருகின்றனர். விரைவில் அவர்கள் குணமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். தற்போது படிப்படியாக குறைந்து 792 பேர் மட்டும் கண்காணிப்பில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story