சத்தியமங்கலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு வேலா மரப்பட்டைகள் உரிப்பு
சத்தியமங்கலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வேலாமரத்தின் பட்டைகள் உரிக்கப்பட்டு உள்ளன. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பவானிசாகர்,
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் மதுவுக்கு அடிமையான மது பிரியர்கள் குடி பழக்கத்தை விட முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்ச தேவைப்படும் ஊறல்களை போலீசார் கண்டறிந்து அழிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் சத்தியமங்கலம் அருகே பசுவபாளையம் பகுதியில் விவசாய தோட்டங்களின் வேலி பகுதியில் வெள்ளவேலா மரங்கள் உள்ளன. இந்த மரத்தின் பட்டை வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும். இந்த மரத்தின் பட்டை சாராயம் காய்ச்ச தேவைப்படும் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. இந்த மரத்தின் பட்டைகளை கள்ள சாராயம் காய்ச்சும் நபர்கள் உரித்து எடுத்து சென்று உள்ளனர்.
வெள்ளவேலா மரங்களில் இருந்து பட்டைகள் உரிக்கப்பட்டதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பசுவபாளையம் கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அந்த பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வாய்ப்புள்ளதாகவும், அதற்காக மரத்தின் பட்டைகளை உரித்து சென்றுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story