நெல்லை மாவட்டத்தில் வீடு, உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவிட தொலைபேசி எண் அறிமுகம் - கலெக்டர் ஷில்பா தகவல்


நெல்லை மாவட்டத்தில் வீடு, உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவிட தொலைபேசி எண் அறிமுகம் - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 19 April 2020 4:30 AM IST (Updated: 19 April 2020 1:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் வீடு, உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவிட இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் வீடு இல்லாதவர்கள், வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து, வந்திருந்து உணவு, தங்க இடமில்லாமல், இருப்பவர்களை, மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள் கண்டறிந்து, அவர்களை நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு 3 நேரமும் உணவு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த முகாமில் இருக்கிறவர்களை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேரில் சந்தித்து புத்தாடைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா கட்டுப்படுத்துதலை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வீடு இல்லாமல், வீதியில் தங்குபவர்கள், வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து, ஊரடங்கின் காரணமாக, தங்க வழி இல்லாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோர்க கண்டறியப்பட்டு அவர்களை இங்கு அழைத்து வந்து தங்க வைத்து உணவு, புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை பரிசோதனை செய்து மீண்டும் அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தன்னார்வலர்களை கொண்டு முடிவெட்டி, குளிக்க வைத்து புத்தாடைகள் வழங்கி பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி வருகிறவர்களை தங்கவைக்க மேலும் சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரசை கட்டுபடுத்திட பல்வேறு நடவடிக்கைள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 9 இடங்கள் கண்காணிப்பு வளையங்களுக்குள் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவாசிய தேவைக்காக வீட்டைவிட்டு வெளியே பொது இடங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் தடையின்றி கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வீடு இல்லாமல், உணவுக்கு தவிப்பவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கிட கல்லணை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவச தொலைபேசி எண்

எனவே நெல்லை மாவட்டத்தில் வீடுகள் இல்லாமல், உணவு இல்லாமல் தவிப்பவர்களை பார்த்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க 1077 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தகவல் தெரிவிக்கலாம். இல்லை எனில் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை தாசில்தார் பகவதி பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story