சேலத்தில் கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்ய மறுப்பு: டாக்டர் மீது கலெக்டரிடம் புகார்


சேலத்தில் கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்ய மறுப்பு: டாக்டர் மீது கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 19 April 2020 3:45 AM IST (Updated: 19 April 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்த டாக்டர் மீது கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

சேலம்,

சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் ஜாவித். இவருடைய மனைவி சல்மா (வயது 23). 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர், தாதகாப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். அதன்படி நேற்று கர்ப்பணி சல்மா சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, அங்கு அவருக்கு முதலில் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர், அங்கிருந்த பெண் டாக்டரை அணுகி ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்கு அந்த டாக்டர், நீங்கள் டெல்லிக்கு ஏதேனும் சென்று வந்தீர்களா? என்று கேட்டதோடு, 2 மாதம் கழித்து வருமாறு கூறி சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த சல்மா, உடனடியாக அங்கிருந்து வெளியே வந்தார்.

இதனை தொடர்ந்து சல்மா தனது உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், கர்ப்பிணி என்றும் கூட பாராமல் சிகிச்சை அளிக்க மறுத்த பெண் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார்.

இதேபோல் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திலும் சல்மா தரப்பில் பெண் டாக்டர் மீது ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், முஸ்லிம் பெண் என்பதால் சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும், எனவே, அந்த டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story