தடை செய்யப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலை, அலுவலகம் செயல்பட அனுமதி கிடையாது - கலெக்டர் ராமன் பேட்டி


தடை செய்யப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலை, அலுவலகம் செயல்பட அனுமதி கிடையாது - கலெக்டர் ராமன் பேட்டி
x
தினத்தந்தி 19 April 2020 5:00 AM IST (Updated: 19 April 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலை, அலுவலகம் செயல்பட அனுமதி கிடையாது என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

சேலம்,

தடை செய்யப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலை, அலுவலகம் செயல்பட அனுமதி கிடையாது என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக கோர்ட்டு தீர்ப்பில் சுட்டிக்காட்டியபடி நடந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இருக்க கூடிய பல்வேறு அரசியல் கட்சிகள், அறக்கட்டளை நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் என யாராக இருந்தாலும் கோர்ட்டு உத்தரவுப்படி தான் நடந்து கொள்ள வேண்டும். எந்த பகுதியில் உணவு பொருட்களை வழங்குவது என்பது குறித்த தகவல்களை 48 மணி நேரத்திற்கு முன்னதாக அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சியாக இருந்தால் ஆணையாளரிடம் அனுமதி பெற வேண்டும்.

மேலும் அவர்கள் உணவு கொடுக்கும் இடத்துக்கு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சென்று, அதை ஆய்வு செய்த பின்னர் தான் வழங்க வேண்டும். இதை வழங்குவதற்காக ஒரு வாகனத்தில் டிரைவரை தவிர 3 பேர் தான் செல்ல வேண்டும். இந்த நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கோர்ட்டு உத்தரவை புறக்கணித்து பல்வேறு இடங்களில் உணவு பொருட்களை வழங்குவதாக புகார்கள் வருகிறது.

அவர்கள் மீது போலீஸ் மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். வரக்கூடிய காலக்கட்டத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். மாவட்டத்தில் ஆயிரம் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை கருவி வந்துள்ளது. இந்த கருவி மூலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளோம். தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் இந்த பரிசோதனை கருவியை பயன்படுத்த உள்ளோம்.

மாவட்டத்தில் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரைக்கும் சமூக தொற்று இல்லை. இதை உறுதிப்படுத்துவது தான் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டின் முக்கியமான நோக்கமாகும். அரசு அமைத்த குழுவின் அறிக்கைக்கு பின்னர் தான், 20-ந் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள் செயல்பட வேண்டும் என்பது தெரியவரும். மேலும் எல்லா அலுவலகத்துக்கும் அதிகப்படியான அரசு ஊழியர்கள் பணிக்கு வர வாய்ப்பு உள்ளது.

மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருக்க கூடிய எந்த ஒரு அலுவலகமும், தொழிற்சாலையும் செயல்பட அனுமதி கிடையாது. இது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Next Story