பிறந்தநாள் விழாவிற்கு சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய பள்ளி மாணவி
தாராபுரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது பிறந்தநாள் விழாவிற்காக சேர்த்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.
தாராபுரம்,
தாராபுரத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 42). இவரது மனைவி ரேகா (38). இவர்களுக்கு சுஜி (15), தீபஸ்ரீ (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும், 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவி சுஜிக்கு வருகிற 27-ந்தேதி பிறந்த நாள் வருகிறது. இந்த வருடம் தனது பிறந்த நாளை கொண்டாட கடந்த ஒரு வருடமாக சுஜி தன் பெற்றோர் தரும் பணத்தை ஒரு உண்டியலில் சேமித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது கொரோனாவால் உலகளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் மூலம் சுஜி அறிந்துகொண்டாள். இந்த கொடிய நோய் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க தமிழக முதல்-அமைச்சர் நிவாரண நிதி கேட்டுள்ளார் என்பதை அறிந்து தனது அப்பாவிடம் தனது பிறந்தநாள் விழா செலவிற்காக சேமித்து வைத்துள்ள ரூ.5 ஆயிரத்து 180-ஐ முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுக்க தந்தையிடம் கொடுத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அவர் தாராபுரத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று அந்த பணத்துக்கு காசோலை எடுத்து மாற்றி தன் மனைவி மற்றும் மகள்களை அழைத்துக்கொண்டு தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் சென்று சப்-கலெக்டர் பவன்குமாரிடம் விவரத்தை கூறி அந்த காசோலையை வழங்கினார். காசோலையை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர், மாணவி சுஜியை பாராட்டினார். மேலும் சுஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த தொகை தமிழக அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story