கொரோனா தடுப்பு நடவடிக்கை: புளியங்குடியில் கலெக்டர் ஆய்வு - 20 பேரை தனிமைப்படுத்திய போலீசார்


கொரோனா தடுப்பு நடவடிக்கை: புளியங்குடியில் கலெக்டர் ஆய்வு - 20 பேரை தனிமைப்படுத்திய போலீசார்
x
தினத்தந்தி 20 April 2020 4:15 AM IST (Updated: 20 April 2020 12:41 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று ஆய்வு செய்தார். வெளியே சுற்றிய 20 பேரை போலீசார் பிடித்து தனிமைப்படுத்தினர்.

புளியங்குடி. 

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஏற்கனவே 15 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் புளியங்குடியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

இதைத்தொடர்ந்து போலீசார் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடையை மீறி வீட்டை விட்டு வெளியே சுற்றிய 20 பேரை நேற்று போலீசார் பிடித்து தனிமைப்படுத்தியுள்ளனர். புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ் ராஜ், ஆடிவேல் ஆகியோர் கூறியதாவது:-

புளியங்குடி பகுதி 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கள் அப்பகுதிக்கு தேவைப்படும் எல்லா பொருட்களும் கிடைக்கின்றனவா என்பதையும், வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்யும் பணியிலும் ஈடுபடுவர்.

கட்டுப்பாட்டு அறை

அத்தியாவசிய அவசர உதவி தேவைப்பட்டால் அந்த சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், தன்னார்வலர்கள் உதவி செய்வார்கள். இதற்கென 50 தன்னார்வ தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், அப்படி வெளிவந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன் அவரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

இப்பணிகள் அனைத்தும் முறையாக நடைபெறுகிறதா? யாரும் வெளியே வராமல் உள்ளனரா? என்பதை கண்காணிப்பதற்காகவும், மேலும் நோய் பரவாமல் தடுக்கும் வகையிலும் போலீசார் மூலம் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியாக புளியங்குடி பஸ்நிலையத்தில் போலீசார் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 7708453108, 7708906108, 7395898108 ஆகிய செல்போன் எண்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள், மருத்துவ உதவிகளை கேட்டு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

புளியங்குடி நகரசபை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, மேலும் அப்பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று ஆய்வு செய்தார்.

தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், தாசில்தார் அழகப்பாராஜா, நகரசபை ஆணை யாளர் குமார் சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால்மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story