கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இன்று வேலை நிறுத்தம் - 44 ஆயிரம் பேர் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் 44,700 கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக, கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க துணைத்தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிதாக மேலாண்மை இயக்குனர்களை நியமனம் செய்வதாக அரசு உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க துணைத்தலைவர் நடராஜன் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்களில் 44 ஆயிரத்து 700 பணியாளர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 4400 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 180 நகர கூட்டுறவு சங்கங்கள் தற்போதுள்ள நிலையில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாக குழுவின் மூலம் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கங்கள் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளின் கண்காணிப்பில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இச்சங்கங்களுக்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகளையே மேலாண்மை இயக்குனர்களாக நியமனம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்களுக்கான ஊதியத்தை அந்த சங்கங்களே வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக கூட்டுறவு சங்கங்கள் முறையாக செயல்பட முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. சங்கங்களின் மொத்த வருவாயில் 50 சதவீதத்துக்குள் தான் பணியாளர்கள் சம்பளம் இருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. இந்த நிலையில் மேலாண்மை இயக்குனர் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கான ஊதியத்தை வழங்க இயலாத நிலை சங்கங்களுக்கு ஏற்பட்டு விடும். இதனால் சங்க செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்படும்.
எனவே இந்தப்பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று (திங்கட் கிழமை) அனைத்து வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்கள் அதை சார்ந்த ரேஷன் கடை பணியாளர்கள், நகர கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். மேலும் மே 1-ந்தேதி முதல் கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டங்களை புறக்கணிப்பு செய்யவும் ஜூன் 15-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
விருதுநகர் மாவட்டத்தில் 182 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களும், 7 நகர கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. இவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 44,700 பணியாளர்கள் இன்றைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story