கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மண்டபம், ஆனந்தூர் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு


கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மண்டபம், ஆனந்தூர் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 April 2020 5:05 AM IST (Updated: 20 April 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மண்டபம், ஆனந்தூர் பகுதிகளில் கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் ஆனந்தூர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதியில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4 ஆயிரத்து 777 பேர் திரும்பியுள்ளனர். இவர்களில் 4 ஆயிரத்து 681 பேர் தனிமைப்படுத்தும் காலம் நிறைவடைந்து கொரோனா தொற்று அறிகுறி இல்லாமல் நலமுடன் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி 96 பேர் அவரவர் குடும்பத்தாருடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 737 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது எனவும், 301 நபர்களுக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 426 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பரமக்குடி, கமுதி, மண்டபம், ஆனந்தூர் ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரத்துறை அலுவலர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களுக்கு நோய் அறிகுறி குறித்து தொடர்ந்து 14 நாட்களுக்கு களஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித் பிரபுகுமார், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகநாதன், ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சாந்தி, உதவி செயற்பொறியாளர்கள் மாடசாமி, சுந்தர்ராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story