விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க ஊரடங்கிலும் விதைச்சான்று பணி தீவிரம்
விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் விதைச்சான்று பணி உடுமலை பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது.
போடிப்பட்டி,
கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் முடங்கிக்கிடக்கிறது. இதனால் குடிசைத்தொழில் முதல் பெரியதொழிற்சாலைகள் வரை உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருளான உணவுப்பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு உற்பத்தித்தொழிற்சாலையான விவசாயப்பணிகளுக்கு முழு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி விவசாயப்பணிகள் தங்கு தடையின்றி நடக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் உணவு உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளான விதைகள் உற்பத்தியில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இதையடுத்து உடுமலையில் விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கொண்டைக்கடலை விதைகளை பைகளில் அடைத்து எடை போட்டு சான்றட்டைகள் பொருத்தும் பணிகள் விதைச்சான்று அலுவலர் பிரகாஷ் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
வரும் சீசனில் விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதனடிப்படையில் அனுமதி பெற்று விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகளிடமிருந்து விதைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் தர ஆய்வு முடிந்த நிலையில் இருப்பு இருந்தது.
அவற்றை பைகளில் அடைத்து சான்றட்டை பொருத்தும் பணிகள் முடிந்தால் மட்டுமே விவசாயிகளுக்கான விதைகளுக்கு உரிய தொகை கிடைக்கும். அதனால் ஊரடங்கு காலத்திலும் பணியாளர்களை பயன்படுத்தி சான்றட்டைகள் பொருத்தும் பணிகளை முடித்துள்ளோம். இதனால் விவசாயிகளுக்கு உரிய தொகை விரைவில் கிடைக்கும். தற்போது 3 ஆயிரத்து 750 கிலோ கொண்டைக்கடலை விதைகள் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story