எல்லையில் பள்ளம் தோண்டி சாலை துண்டிப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு: அரூர் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை


எல்லையில் பள்ளம் தோண்டி சாலை துண்டிப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு: அரூர் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 20 April 2020 11:30 PM GMT (Updated: 20 April 2020 8:10 PM GMT)

பொம்மிடி அருகே மாவட்ட எல்லையில் பள்ளம் தோண்டி சாலை துண்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களிடம் அரூர் உதவி கலெக்டர் பிரதாப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பொம்மிடி,

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி ஏற்காடு மலை அடிவாரத்தில் பூமரத்தூர், வீராட்சியூர், கரடியூர், முக்கோணம், செம்மநத்தம், புளியூர், நாகலூர், வேப்பாடி, காந்திநகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தர்மபுரி மாவட்டம் பொம்மிடிக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் தர்மபுரி மாவட்டம் பொம்மிடிக்கு வந்தால் இங்குள்ள மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் என்பதால் எஸ்.பாளையம்-வேப்பாடி பாலம் அருகே தர்மபுரி மாவட்ட எல்லையில் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 20 கிராமமக்கள் பொம்மிடிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த பகுதியை அரூர் உதவி கலெக்டர் பிரதாப், கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தகவல் அறிந்ததும் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உதவி கலெக்டர் பிரதாப் கூறியதாவது:-

இந்த பகுதியில் சேலம்-தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் ராமமூர்த்தி நகர் பிரதான சாலையில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குறுக்குசாலை வழியாக கடந்த 3 நாட்களில் இரவு நேரங்களில் கேரளா மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 350 வாகனங்கள் தர்மபுரி மாவட்டத்திற்குள் நுழைந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்காரணமாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த குறுக்கு சாலை தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் அக்கரையூர், எஸ்.பாளையம், கரடியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படவில்லை. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காண்பித்து விட்டு எப்போது வேண்டுமானாலும் ராமமூர்த்தி நகர் சாலை வழியாக பொம்மிடி மற்றும் தர்மபுரிக்கு சென்று வரலாம். இவ்வாறு உதவி கலெக்டர் கூறினார்.

அப்போது கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் விஸ்வநாதன், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் கற்பகவடிவு, பொம்மிடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி சேகர் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள், போலீசார் உடனிருந்தனர்.


Next Story