சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் இலவச உணவு


சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் இலவச உணவு
x
தினத்தந்தி 21 April 2020 5:00 AM IST (Updated: 21 April 2020 2:23 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டது. இதனை ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 17-ந் தேதி சேலம் வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து கொரோனா தாக்கத்தின் காரணமாக போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அவர்களுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் காலை மற்றும் மதியம் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும், அதற்கான செலவை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்தநிலையில், சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் முன்னிலை வகித்தார். இதேபோல், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களிலும் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் ஏழை, எளிய மக்கள் உணவு சாப்பிடும் வகையில் முதல்-அமைச்சர் சார்பாகவும், அ.தி.மு.க. சார்பாகவும் காலையில் இட்லி, வேகவைத்த முட்டையும், மதியம் சாப்பாடு மற்றும் வேக வைத்த முட்டையும் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு அம்மா உணவகத்தில் உணவு சாப்பிடலாம், என்றார்.


Next Story