சிவகங்கைக்கு வந்த ‘ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள்’ - பரிசோதனை எப்போது? அதிகாரி விளக்கம்
சிவகங்கைக்கு ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகள் வந்துள்ளன. அந்த கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெறுவது எப்போது? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்தார்.
சிவகங்கை,
கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற பரிசோதனை கருவிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறைக்கு 300 ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 300 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்துள்ளன. இதில் 40 கருவிகள் சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கும், 40 கருவிகள் மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும், மீதம் உள்ள கருவிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்று அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் லேப் டெக்னீசியன்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக 7 நாட்கள் தொடர்ந்து ஒருவருக்கு காய்ச்சல், சளி இருந்தால் மட்டுமே இந்த கருவியின் மூலம் பரிசோதிக்கப்படும். இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானால் அதை மீண்டும் ஒரு தடவை மதுரைக்கு அனுப்பி பரிசோதித்து உறுதி செய்யப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் சளி தொல்லை இருந்தால், அதன்மூலம் பரிசோதனை செய்ய ஏற்கனவே வி.டி.எம். என்ற கருவியும் 300 உள்ளன. இதனால் தேவையான அளவு பரிசோதனை கருவிகள் உள்ளன. இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் இந்த கருவிகளை கொண்டு பரிசோதனை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story