வெளி நபர்கள் ஊருக்குள் வருவதை தடுக்க சாலையில் முள்வேலி அமைப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
கிருஷ்ணகிரி அருகே வெளிநபர்கள் ஊருக்குள் வருவதை தடுக்க சாலையில் முள்வேலிகளை அமைத்தும், பேனர் வைத்தும் தடுப்புகள் ஏற்படுத்தியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஊருக்குள் வெளிநபர்கள் வரக்கூடாது என்பதற்காக சில இடங்களில் கிராம மக்களே தடுப்புகளை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், கிருஷ்ணகிரி அருகே உள்ள அகசிப்பள்ளி ஊராட்சி சார்பில் கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டூர் என்ற இடத்தில் உள்ள பிரிவு சாலையில் முள்வேலி அமைத்தும், கற்களை போட்டும் தடை ஏற்படுத்தி உள்ளனர்.
இதன் காரணமாக நடந்து செல்பவர்களை தவிர வேறு யாரும் செல்ல முடியாதபடி தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு அரசு அதிகாரிகள் கூட ஜீப் உள்ளிட்ட அரசு வாகனங்களில் அந்த கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் கிராமத்தில் வெளி நபர்கள் வந்தால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேனர் வைத்துள்ளனர்.
இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:-
கார் மூலம் அந்த பகுதியில் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அவசர தேவைக்கு கூட செல்ல முடியாமல் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக சின்ன மோட்டூர், பெரிய மோட்டூர், அகசிப்பள்ளி, கனகமுட்லு, கணவாய்பட்டி, மேலேரிக்கொட்டாய், பாலேகுளி, வேலம்பட்டி போன்ற ஊர்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் அவதிக் குள்ளாகினர்.வேலம்பட்டி, பாலேகுளி செல்பவர்கள் பெரும்பாலானோர் இந்த சாலையை தான் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த தடையால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் காவேரிப்பட்டணம் சென்று, அங்கிருந்து வேலம்பட்டிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேரம் வீணாவதுடன், எரிபொருளும் அதிக அளவில் செலவாகிறது. எனவே, இங்குள்ள தடையை அகற்றிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மக்களே சாலையை துண்டித்தும், முள்வேலிகள் போட்டும், கற்கள் வைத்தும் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் அவசர வேலையாக அந்த கிராமத்திற்குள் அரசு அலுவலர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story